Monday, May 11, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (205)

பாடல்:
*******

முற்றிய திருவின் மூவர் ஆயினும்,
பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே;
விறற்சினம் தணிந்த விரைபரிப் புரவி
உறுவர் செல்சார்வு ஆகிச், செறுவர்
தாளுளம் தபுத்த வாள்மிகு தானை,
வெள்வீ வேலிக் கோடைப் பொருந!
சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்,
நோன்சிலை, வேட்டுவ! நோயிலை யாகுக!
ஆர்கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்துக்,
கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூ
நீரின்று பெயரா ஆங்குத், தேரொடு
ஒளிறுமறுப்பு ஏந்திய செம்மற்
களிறின்று பெயரல, பரிசிலர் கடும்பே

                - பெருந்தலைச் சாத்தனார்

திணை: பாடாண் திணை

துறை: பரிசில் கடா நிலை துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* முதிர்ந்த செல்வம் பெற்ற மூவேந்தர் ஆயினும் அன்பில்லாமல் கொடுத்தால் நான் வாங்கமாட்டேன்.

* செறுக்கொண்டு தாக்கிய வாள்-வீரர்களின் செருக்கை அழித்த வெற்றியால் சினம் தணந்த குதிரைப்படை மறவர்களைக் கொண்ட மன்னனே!

* முல்லை வேட்டைநாயையும், வலிமை மிக்க வில்லையும் கொண்ட வேட்டுவ! நீ துன்பமில்லாமல் வாழ்வாயாக.

* கதநாய் – மோப்பத்தால் மூக்கு கதகதக்கும் வேட்டைநாய். அது மான் கூட்டங்களை வளைத்துப் பிடித்துத் தரும் வேட்டைநாய்.

* மேகம் கடல் வளத்தை அள்ளிக்கொள்ளாமல் திரும்பாதது போல, யானைப் பரிசில் பெறாமல் பரிசிலர் சுற்றம் மீள்வதில்லை என்பதை உணர்ந்துகொள்.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் பெருந்தலைச் சாத்தனார். பாடல் எண் 205. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

Thursday, May 7, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (204)

பாடல்:
*******

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.

                - கழைதின் யானையார்

திணை: பாடாண் திணை

துறை: பரிசில் கடா நிலை துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* ஈ’ என்று பல்லை இளித்துக்கொண்டு இரத்தல் இழிவு. அப்படி இரப்பவனுக்கு ‘இல்லை’ என்று சொல்லி ஏதும் கொடுக்காமல் இருப்பது அதைக்காட்டிலும் இழிவானது.

* ‘இதனைப் பெற்றுக்கொள்’ என்று ஒருவனுக்கு வயங்குவது உயர்ந்த செயல். அவ்வாறு வழங்குவதை ‘எனக்கு வேண்டாம், நான் பெற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது கொடுப்பதைக் காட்டிலும் மேலானது. தெளிந்த நீரை உடைய கடலில் செல்வோர் அதன் நீரை உண்ணமாட்டார்கள்.

* வளர்க்கும் ஆடுமாடுகளும், காட்டு விலங்கினங்களும் சென்று உண்ணும் சேறுபட்டக் கலங்கல் நீரே ஆயினும் தாகம் தீர்த்துக்கொள்ள அந்த நீரைத் தேடியே விரும்பி மக்கள் செல்வர்.

* ஓரி, கருமேகம் வானத்திலிருந்து சுரக்கும் மழை போல வழங்கும் வள்ளல் நீ. உன்னிடம் பரிசில் கிடைக்காவிட்டால் தான் புரப்பட்டு வந்த புள் சரியில்லை என்று நாடி வந்தவர் நொந்துகொள்வார்களே அல்லாமல் வள்ளல்களைப் பழிக்கும் வழக்கம் இல்லை.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் கழைதின் யானையார். பாடல் எண் 204. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

Wednesday, May 6, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (203)

பாடல்:
*******

கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும்
தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்,
எல்லா உயிர்க்கும் இல்லால், வாழ்க்கை;
இன்னும் தம்மென எம்ம்னோர் இரப்பின்,
முன்னும் கொண்டிர்என, நும்மனோர் மறுத்தல்
இன்னாது அம்ம; இயல்தேர் அண்ணல்!
இல்லது நிரப்பல் ஆற்றா தோரினும்,
உள்ளி வருநர் நசையிழப் போரே;
அனையையும் அல்லை, நீயே; ஒன்னார்
ஆர்எயில் அவர்கட்கு ஆகவும்,`நுமது` எனப்
பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்!
பூண்கடன், எந்தை! நீஇரவலர் புரவே.

                - ஊன்பொதி பசுங்குடையார்

திணை: பாடாண் திணை

துறை: பரிசில் கடா நிலை துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* முன்பு பொழிந்தேனே’ என்று மழை பெய்யாவிட்டாலும், ‘முன்பு விளைந்தேனே’ என்று நிலம் விளையாவிட்டாலும் உயிரினங்களுக்கு வாழ்க்கை இல்லை.

* தேரில் வரும் தலைவனே! ‘இன்னும் தா’ என எம்மைப் போன்றோர் இரந்தால், ‘முன்னே வாங்கிச் சென்றீரே’ என்று உன்னைப்போன்றோர் மறுத்தல் துன்பம் தரும் நிகழ்வாகும். வேண்டி வந்தவரின் வறுமையைப் போக்கமுடியாமல் வருந்துவோரைக் காட்டிலும், பரிசில் நாடி வருபவர் பெறாவிட்டால் அடையும் துன்பம் பெரிது. நீயே, கொடுக்கமுடியாமல் வருந்துபவன் அல்லன்.

* பகைவர் கோட்டை அவர்களின் கைவசம் இருக்கும்போதே அதனைப் பாணர்களுக்கு வழங்கிவிட்டு அதனை வெல்லும் கொடையாளி. இரவலனாகிய என்னைப் பாதுகாப்பது உன் கடமை.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் ஊன்பொதி பசுங்குடையார். பாடல் எண் 203. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

Tuesday, May 5, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (202)

பாடல்:
*******

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்,
கட்சி காணாக் கடமா நல்லேறு
கடறுமணி கிளரச், சிதறுபொன் மிளிரக்,
கடிய கதழும் நெடுவரைப் படப்பை
வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி,
இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்,
கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி;
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!
நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே; இயல்தேர் அண்ணல்!
எவ்வி தொல்குடிப் படீஇயர், மற்று,`இவர்
கைவண் பாரி மகளிர்` என்றஎன்
தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும;
விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை
மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்
இரும்புலி வரிப்புறம் கடுக்கும்
பெருங்கல் வைப்பின் நாடுகிழ வோயே!

                - கபிலர்

திணை: பாடாண் திணை

துறை: பரிசில் கடா நிலை துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* புலிகடிமால், இயல்தேர் அண்ணல், நீ புலவனாகிய என் சொல்லைக் கேளாதது போல, முன்பொரு காலத்தில் உன் வேளிர் குடி அரசன் எவ்வி புலவர் கழாத்தலையாரை இகழ்ந்தான்.

* அதன் பயனாக அவனது பேரரையம், சிற்றரையம் ஏன்னும் ஊரும் அழிந்து அரசன் எவ்வியின் பழங்குடியின் கால்வழியும் இல்லாமல் போய்விட்டது. நான் உன்னிடமிருந்து விடைபெற்றுக்கொள்கிறேன்.

* இவர் கொடைவளம் மிக்க பாரி மகளிர் என்று அறிமுகப்படுத்திய என் தெளிவில்லாத புன்சொல்லைப் பொறுத்தருள்க. பெருமானே விடேபெற்றுக்கொள்கிறேன். உன் வேல் வெல்வதாகுக.

* அந்நாட்டு வேட்டுவர் வேட்டையாட மான் ஒன்றைத் துரத்துகையில் அது அக் காட்டில் கிடக்கும் மணிக்கற்கள் வெளிப்படுமாறு மண் கிளம்பும்படி ஓடுமாம். கோடி கோடியாக உனக்குப் பொருள் உதவிய மூதூர். அரசன் இருங்கோவேள் நாடு மலையடுக்குகளைக் கொண்டது.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் கபிலர். பாடல் எண் 202. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

Monday, May 4, 2020

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு  (4)

வாள்,வலந்தர, மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள், களங்கொளக், கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
தோல்; துவைத்து அம்பின் துனைதோன்றுவ, 5
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே, எறிபதத்தான் இடங் காட்டக்,
கறுழ் பொருத செவ் வாயான்,
எருத்து வவ்விய புலி போன்றன;
களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய், 10
நுதி மழுங்கிய வெண் கோட்டான்,
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி,
மாக் கடல் நிவந் தெழுதரும் 15
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே,
தாயில் தூவாக் குழவி போல,
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.
                 - பரணர்.

திணை : வஞ்சித்திணை.

துறை : கொற்ற வள்ளை

பாடல் கூறும் நெறி

*உன் நிமிர்ந்த மார்க் கொண்டு பகைவர்களை விரட்டு.
*பகைவர்களை உன் எதிரில் வாலாட்ட விடாதே. 
*சினம் கொண்ட சிங்கத்தின் குணம் கொள்.
*எதையும் கண்டு அஞ்சாதே.


பாடல் குறிப்பு 

பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு  (எட்டுத்தொகை).பாடலை பாடியவர் பரணர் (4). 

தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளை பின்பற்றுவோம். தமிழிற்க்கு மேலும் அழகு சேர்ப்போம்.

வளர்க தமிழ்!           வாழ்க தமிழ்!!

Sunday, May 3, 2020

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (201)

பாடல்:
*******

`இவர் யார்?` என்குவை ஆயின், இவரே,
ஊருடன் இரவலர்க்கு அருளித் ,தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை,
படுமணி யானைப்,பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி மகளிர்; யானே
தந்தை தோழன்: இவர்என் மகளிர்;
அந்தணன், புலவன், கொண்டுவந் தனனே;
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்,
செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை,
உவரா ஈகைத், துவரை ஆண்டு,
நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறற்போர் அண்ணல்!
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண்கடன் உடைமையின், பாண்கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மா அல்!
யான்தர, இவரைக் கொண்மதி! வான்கவித்து
இருங்கடல் உடுத்தஇவ் வையகத்து, அருந்திறல்
பொன்படு மால்வரைக் கிழவ! வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்,
கெடல்அருங் குறைய நாடுகிழ வோயே!
.
                - கபிலர்

திணை: பாடாண் திணை

துறை: பரிசில் கடா நிலை துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* தபங்கர் என்னும் முனிவர் தவம் செய்கையில் பாயவந்த புலியை ஹொய்சள என்று கூறிய முனிவர் ஆணைப்படிக் கொன்ற அரசன் புலிகடிமால் என்று பெயர் பெற்றான் என்று ஒரு கதை.

* சசகபுரம் என்னும் காட்டில் தன் குலதெய்வத் தேவியை வழிபடச் சென்றவனை புலி தாக்க வருகையில் அங்கிருந்த பெரியவர் ஒருவர் ஒரு தடியைத் தூக்கிப்போட்டு ‘ஹொய்சள’ என்று கூற அத் தடி கொண்டு புலியைக் கொன்றவன் புலிகடிமால் எனப்பட்டான் என்பது மற்றொரு கதை.

* புலியின் அட்டகாசத்தைப் போக்கி மக்களைக் காப்பாற்றியவன். இது இவன் ஆற்றிய ஆண்மகனின் கடமை.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் கபிலர். பாடல் எண் 201. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

Saturday, May 2, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (199)

பாடல்:
*******

கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்
செலவுஆ னாவே, கலிகொள் புள்ளினம்;
அனையர் வாழியோ இரவலர்; அவரைப்
புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்
உடைமை ஆகும், அவர் உடைமை;
அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே.

                - பெரும்பதுமனார்

திணை: பாடாண் திணை

துறை: பரிசில் கடா நிலை துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* பழுத்திருக்கும் ஆலம்பழம் நேற்று உண்டோமே என்று அந்த மரத்தை நாடிப் பறவைகள் மறுநாள் வராமல் இருப்பதில்லை.

* அதுபோலக் கொடைவழங்கக் காத்திருக்கும் செயல்வீரனிடம் இரவலர் வருவது அவர்களிடம் உள்ள இல்லாமையே.

* எனவே உடையவன் தன் உடைமையை இல்லாதவர்களின் உடைமையாக ஆக்கித் தரவேண்டும். அவரது இல்லாமையைத் தன் இல்லாமையாக எண்ணிக்கொள்ள வேண்டும்.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் பெரும்பதுமனார். பாடல் எண் 199. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!