Saturday, May 2, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (199)

பாடல்:
*******

கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்
செலவுஆ னாவே, கலிகொள் புள்ளினம்;
அனையர் வாழியோ இரவலர்; அவரைப்
புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்
உடைமை ஆகும், அவர் உடைமை;
அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே.

                - பெரும்பதுமனார்

திணை: பாடாண் திணை

துறை: பரிசில் கடா நிலை துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* பழுத்திருக்கும் ஆலம்பழம் நேற்று உண்டோமே என்று அந்த மரத்தை நாடிப் பறவைகள் மறுநாள் வராமல் இருப்பதில்லை.

* அதுபோலக் கொடைவழங்கக் காத்திருக்கும் செயல்வீரனிடம் இரவலர் வருவது அவர்களிடம் உள்ள இல்லாமையே.

* எனவே உடையவன் தன் உடைமையை இல்லாதவர்களின் உடைமையாக ஆக்கித் தரவேண்டும். அவரது இல்லாமையைத் தன் இல்லாமையாக எண்ணிக்கொள்ள வேண்டும்.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் பெரும்பதுமனார். பாடல் எண் 199. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

1 comment:

  1. கொடையது தனதன்று வரியோர் ஆக்கமாய்
    காத்து நிற்பா ன்கோ.
    வடலூர்ஜெகன்

    ReplyDelete