Tuesday, May 5, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (202)

பாடல்:
*******

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்,
கட்சி காணாக் கடமா நல்லேறு
கடறுமணி கிளரச், சிதறுபொன் மிளிரக்,
கடிய கதழும் நெடுவரைப் படப்பை
வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி,
இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்,
கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி;
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!
நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே; இயல்தேர் அண்ணல்!
எவ்வி தொல்குடிப் படீஇயர், மற்று,`இவர்
கைவண் பாரி மகளிர்` என்றஎன்
தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும;
விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை
மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்
இரும்புலி வரிப்புறம் கடுக்கும்
பெருங்கல் வைப்பின் நாடுகிழ வோயே!

                - கபிலர்

திணை: பாடாண் திணை

துறை: பரிசில் கடா நிலை துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* புலிகடிமால், இயல்தேர் அண்ணல், நீ புலவனாகிய என் சொல்லைக் கேளாதது போல, முன்பொரு காலத்தில் உன் வேளிர் குடி அரசன் எவ்வி புலவர் கழாத்தலையாரை இகழ்ந்தான்.

* அதன் பயனாக அவனது பேரரையம், சிற்றரையம் ஏன்னும் ஊரும் அழிந்து அரசன் எவ்வியின் பழங்குடியின் கால்வழியும் இல்லாமல் போய்விட்டது. நான் உன்னிடமிருந்து விடைபெற்றுக்கொள்கிறேன்.

* இவர் கொடைவளம் மிக்க பாரி மகளிர் என்று அறிமுகப்படுத்திய என் தெளிவில்லாத புன்சொல்லைப் பொறுத்தருள்க. பெருமானே விடேபெற்றுக்கொள்கிறேன். உன் வேல் வெல்வதாகுக.

* அந்நாட்டு வேட்டுவர் வேட்டையாட மான் ஒன்றைத் துரத்துகையில் அது அக் காட்டில் கிடக்கும் மணிக்கற்கள் வெளிப்படுமாறு மண் கிளம்பும்படி ஓடுமாம். கோடி கோடியாக உனக்குப் பொருள் உதவிய மூதூர். அரசன் இருங்கோவேள் நாடு மலையடுக்குகளைக் கொண்டது.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் கபிலர். பாடல் எண் 202. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

2 comments:

  1. அருஞ்சொற்பொருள் கிடைக்க மகிழ்வோம்

    ReplyDelete
  2. ஐயா வணக்கம் சில கடினச்சொற்களுக்கு பொருள் புரிவதில் கடினம் என்போன்றோர் அறிந்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் ஐயா
    வடலூர்ஜெகன்

    ReplyDelete