Sunday, April 19, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (188)

பாடல்:
*******

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் - தாம் வாழும் நாளே.

                - பாண்டியன் அறிவுடை நம்பி

திணை: பொதுவியல் திணை

துறை: பொருண் மொழிக் காஞ்சித் துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* வாழ்நாளின் பயன் தன் குறையாகப் பிறக்கும் குழந்தைச் செல்வம்.

* எல்லாச் செல்வப் பேறுகளையும் படைத்து அவற்றைப் பலரோடு கூடி உண்ணும் பெருஞ்செல்வர் ஆயினும் அந்தக் குழந்தைச் செல்வம் இல்லை என்றால் பயன் இல்லை.

* பலரோடு கூடி உண்ணும்போது இடையிலே குழந்தை சின்னச்சின்ன அடி வைத்து நடந்துவந்து கையை நீட்டித், தான் உண்ணும் உணவில் கையை வைத்து, அதே கையால் தன்னையும், தன் தாய்தந்தையரையும் தொட்டு, வாயால் சோற்றைக் கவ்வி, கையை விட்டுத் துளாவி, நெய் மணக்கும் சோற்றைத் தன் மேனியிலும், தன் பெற்றோர் மேனியிலும் உதிர்த்துக்கொண்டு எல்லாரையும் மயக்கும் பாங்கினது அந்தக் குழந்தைச் செல்வம்.


பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் பாண்டியன் அறிவுடை நம்பி. பாடல் எண் 188. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

1 comment:

  1. குழவியதன் குறும்பதும் குடிலெங்கும் தடம்பதிக்கும்
    குறுயிழை யாய்நீளும் சுகம்தினம்.
    வடலூர்ஜெகன்

    ReplyDelete