Monday, April 27, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (194)

பாடல்:
*******

ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்,
படைத்தோன் மன்ற, அப் பண்பி லாளன்!
இன்னாது அம்ம, இவ் வுலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே.

                - பக்குடுக்கை நன்கணியார்

திணை: பொதுவியல் திணை

துறை: பொருண் மொழிக் காஞ்சித் துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* ஓர் இல்லத்தில் நெய்தல் பறையின் ஒலி கேட்கிறது. மற்றோர் இல்லதில் திருமண முழவின் ஒலி கேட்கிறது. ஒரே நாளில் ஒரே ஊரில் இந்த நிகழ்வுகள்.

* திருமண இல்லத்தில் பூமாலை சூடி மகிழ்கின்றனர். நெய்தல்பண் ஒலிக்கும் இல்லத்தில் ஒருவன் இறந்துவிட்டதால் அவனை இழந்தவர் கண்ணீர் மல்கக் கலங்குகின்றனர்.

* இப்படி உலகியலை ஒருவன் படைத்திருக்கிறான். அவன் பண்பு இல்லாதவன். இந்த உலகம் துன்ப மயமானது. இந்த இயல்பினை உணர்ந்துகொள்ள வேண்டும். அதனை எண்ணிக் கலங்கக் கூடாது.

* இனியவற்றைக் காணவேண்டும். இன்னாதவற்றில் இன்பத்தைக் காணவேண்டும். துன்பத்தில் இன்பம் காணவேண்டும்.


பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் பக்குடுக்கை நன்கணியார். பாடல் எண் 194. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

1 comment:

  1. இன்னாத துமினிக்கக் கற்றலே நன்று
    வாழ்வினு ருபொரு ளுணர்.
    வடலூர்ஜெகன்

    ReplyDelete